Thursday 18 December 2014

தமிழ் விளையாட்டு -10


எம்ஜிஆர் அமைச்சரவையில் காளிமுத்து அமைச்சராக இருந்தார். 1980 களின் தொடக்கத்தில். அதிமுக - காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் மீது கோபம் வந்தால், காளிமுத்துவை விட்டு பேசச் செய்வார் எம்ஜிஆர். அப்படி ஒரு முறை காங்கிரசை காளிமுத்து விமர்சித்தது இன்றளவும் பிரபலம். காளிமுத்து சொன்னது...

சருகு மலராகாது
கருவாடு மீனாகாது
கறந்த பால் மடி புகாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது....

என்னா அடி. யப்பா...

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார் காளிமுத்து. 1991 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கடலாடி தொகுதியில் போட்டியிட்டார் காளிமுத்து. சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். கடலாடி தொகுதியில் காளிமுத்துவை ஆதரித்து பிரச்சாரம் செய்த கலைஞர்,

தம்பி காளிமுத்து...
கடலாடி வா...
காத்திருப்பேன் துறைமுகத்தில்

என்றார். அலையில் அடித்துச் செல்லப்பட்டார் காளிமுத்து. ராஜீவ் கொலையை அடுத்து நடந்த அந்த தேர்தலில் திமுகவுக்கு பேரிடி. துறைமுகத்தில் கலைஞர் மட்டும்தான் வென்றார். மற்ற எல்லா தொகுதியிலும் திமுக தோற்றது.

பின்னர் அதிமுகவில் சேர்ந்தார் காளிமுத்து.(அப்போது நடந்த சுவாரசியத்தை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன். மீண்டும் இங்கு பிறகு போடுகிறேன்) திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த பயிற்சி பட்டறையில் பேசினார் காளிமுத்து. அவர் பேசியது...

இங்கே நான் பயிற்சி அளிக்கவா வந்திருக்கிறேன்? பயிற்சி பெற வந்திருக்கிறேன்.
இடையிலே சிலகாலம் தடம் மாறி, தடுமாறி, தடுக்கி விழுந்து.. கைகளிலும் கால்களிலும் காயம் பட்டு, உங்கள் பாச முகங்களில் தவழும் புன்னகையையே என் புண்ணுக்கு மருந்தாக பூசிக் கொள்ள வந்திருக்கிறேன்.
புரட்சித் தலைவி மீதான விசுவாசத்தையே சுவாசமாக கொண்டிருக்கும் உங்களிடம், விசுவாசத்தைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்.

இப்படிப் பேசினார் காளிமுத்து. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது பேரவைத் தலைவர் ஆக்கப்பட்டார் காளிமுத்து. பேரவைத் தலைவர் பதவி ஏற்றதும், அவையில் தன் பேச்சை

தாயை வணங்குகிறேன்
தமிழ்த் தாயை வணங்குகிறேன்

என்று தொடங்கி ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்டினார் காளிமுத்து.

அடடா...எப்படியெல்லாம் கைகொடுக்கிறது தமிழ்.


2 comments:

  1. வருடம் 2001 என்று எண்ணுகிறேன்.. ஏனென்றால் அவர் 2006ல் காலமானார்

    ReplyDelete
  2. இன்னும் பிரபலமான வாசகம் ஒன்று உண்டு! அது, "சிலரைப் பார்த்தால் கும்பிடத்தோன்றும்! சிலரைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றும்" என்பது

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_