Thursday 24 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 18



தமிழ் ருசிக்கலாம் வாங்க
==============================
ஒரு கடிதம், இரு உறவு.
+++++++++++++++++++++++++++

தன்னைப் பிரிந்து சென்ற கோவலனுக்குக் கவுசிகன் மூலம் ஒரு கடிதம் அனுப்புகிறாள் மாதவி. அதில் மாதவி எழுதியிருப்பதாக இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்....

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.
குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியொடு
இரவிடைக் கழிதற்குஎன்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்,
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.

கடிதத்தில் மாதவி கூறியிருப்பது இதுதான்....

அடிகளே உங்கள் முன் விழுந்து, உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். தெளிவற்ற என் சிறுமொழிகளை தயவு செய்து கேட்டருள வேண்டுகிறேன்.வயதான தாய் தந்தைக்கு அருகில் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல், உயர்குடியில் பிறந்த கண்ணகியுடன் புகார் நகரை விட்டு சென்றது ஏன்? அதுவும், ஊரைவிட்டு் யாருமே செல்ல விரும்பாத சிறப்பு மிக்க பூம்புகார் நகரைவிட்டு மனைவியுடன் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சென்றதற்கு, நான் செய்த தவறுதான் காரணமோ என்று என் மனம் சோர்வடைகிறது.அப்படி என்னுடைய தவறுதான் காரணம் என்றால், என்னுடைய சொல்லைப் பொருட்படுத்தாமல்,என்னை மன்னிக்க வேண்டுகிறேன். குற்றமற்ற அறிவை உடைய மேன்மை உடைய தங்களைப் போற்றுகின்றேன்.

இப்படி மாதவி எழுதிய மடலை வாசித்த கோவலன் மனம் நெகிழ்ந்தான். மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என்றும் ஆடல் மகள் என்னிடமே நடித்தாள் என்றும் சொல்லிப் பிரிந்தவன், இந்தக க்டிதத்தைப் படித்தபின் மாதவி குற்றமற்றவள் என உணர்கிறான்.
“என் பெற்றோரிடம் சொல்லாமல், ஊரை விட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, மாதவியின் இந்தக் கடிதத்திலேயே உள்ளது. எனவே, இந்தக் கடிதத்தை, நான் கொடுத்ததாக என் பெற்றோரிடம் கோண்டுபோய்க் கொடு” என்று கவுசிகனை அனுப்பி வைக்கிறான் கோவலன்,

காதலன் கோவலனுக்கு மாதவி எழுதிய கடிதம், அதையே, கோவலன் தன் பெற்றோருக்கு அனுப்பக் கூடியதாக இருக்கிறது. ஒரே கடிதம், காதலனுக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது. பெற்றோருக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது.

ஆஹா... இந்தக் கடிதத்தைஎவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறார் இளங்கோவடிகள்.

Monday 21 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 17


தமிழ் ருசிக்கலாம் வாங்க
========================
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
என்று திரைப்பாடலில் புதுக்கவிதை சிந்தனையை, புதிய சிந்தனையை புகுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.
எது இல்லாத ஊரே இல்லை சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். பிடிபடவே இல்லை.
தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு நீங்களும் யோசித்துப் பாருங்கள். பிறகுதான் உங்களுக்கும், “அட இது தோணலையே நமக்கு” என்று தோணும்..
எது இல்லாத ஊர் இல்லை?
சுரதா சொல்கிறார் இதோ...அதுவும் ஒரு திரைப்பாடலில்....காதல் பாடலில்.....
என்ன சொல்கிறார்?
--------------------------------------------------------------
நீலவானம் இல்ல்லாத ஊரில்லை - அன்பே
நீயின்றி நானில்லை.
-------------------------------------------------------------
அட....ஆமாம். இது நமக்குத் தோணலையேன்னு இப்ப தோணுதா உங்களுக்கு?. வானம் இல்லாத ஊர் இல்லை என்பது சாதாரண உண்மைதான். அது நமக்குத் தோணவில்லை. சுரதா எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.
தாமரை, சூரியனைக் கண்டு மலரும். அல்லி, நிலவு கண்டு மலரும். தாழை மலர் எதைக் கண்டு மலரும்?
சுரதா சொல்கிறார்....
சுடர்மின்னல் கண்டு மலரும் தாழையைப் போல்....
என்று சொல்கிறார். மின்னல் கண்டு தாழை மலரும் என்கிறார்.
“எப்ப்படி ஐயா உங்களுக்குத் தெரியும்?” என்று அவரிடமே கேட்டேன். பட்டென்று அவர் சொன்ன பதில்.....
“எனக்கென்ன தெரியும்? நற்றிணையில் சொல்லியிருப்பதை நான் சொன்னேன்.
இதுதான் சுரதா அவர்களின் நேர்மை.