Thursday 30 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 13



சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் டைரக்‌ஷன்.
==============================================
திரைப்படங்களில், குறிப்பாக கே. பாலச்சந்தர் படங்களில், பின்னால் நடக்கப்போவதை உணர்த்தும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை படத்தில், சுஜாதா ஒரு பாட்டுப் பாடுவார். அப்போது கூரை இல்லாத வீடு, துடுப்பு இல்லாத படகுகளைக் காட்டுவார் பாலச்சந்தர். அவளுக்கு வாழ்க்கை அமையப் போவதில்லை என்பதை, இந்தக்காட்சிகள்மூலம் உணர்த்துவார்.

இப்படி ஒரு காட்சியை சிலப்பதிகாரத்தில் வைத்துள்ளார் இளங்கோவடிகள்.

கண்ணகி திருமணம். மணவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் கண்ணகியை வாழ்த்துகிறார்கள். எப்படி தெரியுமா?

காதலற் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்
தீது அறுக

என்று வாழ்த்துகிறார்கள். அதாவது, கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இன்றுபோல என்றும் சேர்ந்திருக்க வேண்டும். பிடித்த கைகள் இறுக்கியபடி இருந்து உங்கள் அன்பு அதிகரிக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நன்மையே நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வாழ்த்தியதன் பொருள்.

ஆனால், “ கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க” என வாழ்த்துகிறார்கள்.

பிரியாமல்
தளராமல்
தீமை ஒழிந்து

என்று முழுக்க முழுக்க அமங்கலச் சொல்லால் வாழ்த்துகிறார்கள். மங்கலச் சொற்களால்தான் வாழ்த்துவார்கள். நல்லா இரு என்று வாழ்த்துவதுதான் மரபு. கெட்டுப் போகாமல் இரு என்று யாரும் வாழ்த்தமாட்டார்கள்.ஆனாலும் அமங்கலச் சொற்களால் வாழ்த்துவதாக எழுதியுள்ளார் இளங்கோவடிகள். ஏன்?
கண்ணகியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தவே இப்படி அமங்கலச் சொற்களைப் போட்டு எழுதி குறிப்பால் உணர்த்துகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே, இளங்கோ அடிகள் டைரக்‌ஷன் எப்படி? வியக்க வைக்கிறதல்லவா?

தமிழ் ருசிக்கலாம் வாங்க..12



சேரனுக்குச் சேர்ந்த பழியைப் பாருங்கள்.
=====================================

முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல்.....

இவன்என் நலங்க்கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று - அஞ்சொலாய்
செல்லும் நெறியெலாம் சேரலார்க்கோக் கோதைக்குச்
சொல்லும் ப்ழியோ பெரிது.

தலைவி தன் தோழியை அழைத்துச் சொல்கிறாள். எப்படி அழைக்கிறாள்? “அஞ்சொலாய்” என்று அழைக்கிறாள். அதாவது, ”அழகிய சொல்லினளே” என்று தோழியை அழைக்கிறாள். ஏன் தெரியுமா? எப்போதும் தலைவி மகிழும்படியாகவேபேசுபவள் தோழி. தோழியின் சொல் மகிழ்ச்சி தருவதாகவே இருப்பதால், அவை அழகிய சொல்லாக இருக்கிறது தலைவிக்கு. அதனால், அழகிய சொல்லினளே என்று தோழியை அழைக்கிறாள். அழைத்து என்ன சொல்கிறாள்?

செல்லும் இடமெல்லாம் சேர மன்னன் மீது பழி சொல்கிறார்களே தோழி...என்கிறாள். சொல்வது யார்? இளம் பெண்கள். என்ன பழி சொல்கிறார்கள் தெரியுமா?

“என் அழகைக் கவர்ந்த கள்வன் இவன்”
”என் மன உறுதியை அழித்த கள்வன் இவன்”

என்று சேரனைப் பழி சொல்கிறார்களாம் இளம் பெண்கள்.சேர மன்னன் அவ்வளவு ஆணழகனாம். இதுவரை காதலில் விழாமல் இருந்தவள், சேர மன்னனைக் கண்டதும் காதலில் விழுந்தாள். அவனையே எண்ணி எண்ணி ஏங்குகிறாள். இதனால் உடல் இளைத்து, அழகை இழக்கிறாள். அதனால்தான், இவள் அழகை கவர்ந்து சென்ற கள்வன் அவன் என்று மன்னனைப் பழி கூறுகிறாள்.
இதுவரை யார் மீதும் காதல் கொள்ளாமல் உறுதியாக இருந்தாள். சேரனைப் பார்த்ததும் உடைந்ததாம் அவள் மன உறுதி. அதனால்தான், “எனது நெஞ்சம் நிறையழித்த கள்வன்” அதாவது, என் மன உறுதியை அழித்த கள்வன் சேரன் என்று சொல்கிறாள். இப்படி ஒருத்தி அல்ல...போகும் வழியெல்லாம் பல பெண்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு சேர மன்னனைக் கண்ட எல்லா பெண்களும் அவன் மீது காதல் கொண்டார்களாம். அப்படி ஒரு ஆணழகன் அவன்.

”என் நலம் கவர்ந்த கள்வன்” என்று தலைவி சொல்வதாகக் கூறுகிறார். இங்கே நலம் என்று குறிப்பிடுவது, தலைவியின் அழகைத்தான். அழகை ஏன் நலம் என்று சொன்னார் தெரியுமா?
பார்க்கும்போதும் பழகும்போது நினைக்கும்போதும் இன்பமளித்து தலைவனுக்கு நலம் பயக்கக் கூடியது தலைவியின் அழகு. அதனால்தான் அவள் அழகை ”நலம்” என்று குறிப்பிடுகிறார்.
எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க நம்ம புலவர்கள்.

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 11



இளம் பெண்கள் சூடுவது பூவை மட்டுமா?
++++++++++++++++++++++++++++++++++++
கலிங்கத்துப் பரணி யில் வரும் கடை திறப்புக் காதை போல சிருங்கார ரசத்தைப் பாடும் இலக்கியம் ஒன்று இல்லை என்றே சொல்லலாம். போர் முடிந்து வீடு திரும்பும் வீரார்கள், தன் வீட்டுக் கதவைத் தட்டுகின்றனர். பிரிவால் வருத்தத்தில் இருக்கும் பெண்கள், கதவைத் திறக்க மறுக்கின்றனர். அவர்களைப் புகழ்ந்து பாடி, கதவைத் திறக்கச் சொல்கிறார் செயங்கொண்டார். அதுதான் கடை திறப்புக்காதை. அதில் இருந்து ஒரு பாடல்....

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!.

தங்களை ஒப்பனை செய்துகொண்ட அழகிய இளம் பெண்கள், பூப் பறிக்க தோட்டத்துக்குச் செல்கின்றனர். அவர்களின் அங்க அழகை ஒவ்வொன்றாக ரசித்து உருகிக் கிடக்கின்றனர் இளைஞர்கள். அப்போது அந்தப் பெண்கள், தோட்டத்தில் உள்ள செங்கழுநீர்ப் பூவைத் திருகி எடுத்து தங்கள் கூந்தலில் செருகுகிறார்கள்.
செங்கழுநீர்ப் பூவை மட்டுமா திருகி எடுத்து செருகினார்கள்? இல்லை. உருகிக் கிடந்த இளைஞர்களின் உயிரையும் சேர்த்துத் திருகி எடுத்து கூந்தலில் செருகிக் கொண்டு போகிறார்களாம். உருகிக் கிடந்தவன் செத்தான். அவன் உயிர் அவளிடம் அல்லவா இருக்கிறது இப்போது?
. அத்தகைய அழகிய பெண்களே போர் முடித்து உங்கள் காதலர் வந்துள்ளார், கோபம் தணிந்து, கதவைத் திறவுங்கள் என்கிறார் செயங்கொண்டார்.

இதே கருத்தை ”என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி” என்ற திரைப்பாடலைல் வைத்துள்ளார் முனியம்மா நடராஜன்.

கண்டாங்கி சேலை கட்டி
கைநிறைய கொசுவம் வச்சு
இடுப்புல சொருவுறியே கண்ணாம்மா
அது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா.

எப்புடி?

தமிழ் ருசிக்கலாம் வாங்க..10



நாலே வரியில் ஒரு நயம்.
======================

பாண்டிய மன்னன் அவையில் கண்ணகி வழ்க்குரைக்கிறாள். தான் நீதி தவறியது அறிந்த மன்னன் உடனே உயிர் துறக்கிறான். இதைப் பார்த்தவர்கள், அந்த நிகழ்வு பற்றி சொல்வதாக நான்கே வரிகளில் இளங்கோ அடிகள் சொல்கிறார்....அந்தப்பாடல் இதோ....

மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

கணவன் கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டு, மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறாள் கண்ணகி. அப்படியே எழுந்து கண்ணீரும் கம்பலையுமாக பாண்டியன் அரசவைக்கு செல்கிறாள். அதன் பிறகு நடந்த நிகழ்வை, அதைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்..எப்படி?

கண்ணகியின் உடம்பில் படிந்திருந்த புழுதியையும் அவளின் தலைவிரி கோலத்தையும் கையில் ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் கண்டதுமே வழக்கிலே மன்னன் தோற்றான். வழக்குரைத்து கண்ணகி சொன்ன சொற்களைச் செவியில் கேட்ட உடனே உயிர்விட்டான் பாண்டியன்.

இதை எவ்வளவு அழகாக நான்கு வரியில் சொல்கிறார் இளங்கோவடிகள்.அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு வரிகள் படிக்கவே எவ்வளவு நயமாக இருக்கிறது பாருங்கள்....

கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்

தமிழ் ருசிக்கலாம் வாங்க..9



ஏழு சொற்களில் ஒரு நாடகக் காட்சி

++++++++++++++++++++++++++++++++++

புரையேறினால், யாரோ நினைக்கிறார்கள் என்று இப்போது நாம் சொல்வது உண்டு. இது போல, தும்மினால், யாரையோ நினைக்கிறோம் என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழகத்தில் இருந்தது. அதேபோல, யாரேனும் தும்மினால், அவரை வாழ்க என்று வாழ்க என்று அருகில் இருப்பவர் வாழ்த்தும் வழக்கமும் இருந்தது. குழந்தைகள் தும்மினால் 100, 108 என்று ஆயுளைச் சொல்லி வாழ்த்தும் வழக்கம் இப்போதும் உள்ளது.
இந்த இரண்டு வழக்கத்தை ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.காதலி ஊடல் கொள்ளவும், பின்னர் ஊடல் தணியவும் தும்மல் காரணமாக அமைவதாக ஒரு நாடகக் காட்சியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
அந்தக் காட்சி இதோ....
காதலன் தும்முகிறான். யாரை நினைத்தாய்....தும்முகிறாய்? என்று கேட்டு, பொய்க் கோபம் கொண்டு ஊடல் கொள்கிறாள் காதலி.அவள் ஊடலை தணிக்க முடியாமல் தவிக்கிறான் காதலன்.
மீண்டும் தும்மல் போடுகிறன். ஊடலை மறந்து, வாழ்க என காதலனை வாழ்த்துகிறாள் காதலி. ஊடல் தணிந்து, கூடி மகிழ்ந்தனர் இருவரும்.இந்த நாடகக் காட்சியை ஏழே சொற்களில் சொல்கிறார் வள்ளுவர். அந்தக் குறள் இதோ:

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.

தமிழ் ருசிக்கலாம் வாங்க..8



கண்ணுக்கு மையெழுதும் காட்சி நுட்பம்
====================================

ஒரு குச்சியில் மையை எடுத்து, கண்ணுக்கு பெண்கள் மையெழுதுவதை பார்த்திருக்கிறோம். அந்தக்குச்சியை மைக்கோல் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர்.அப்படி மையெழுதும் போதும்போது என்ன நடக்கிறது என்ற நுட்பத்தை மிக அழகாகச் சொல்கிறார் வள்ளுவர்.

கோலில் மையை எடுத்து கீழ் இமைக்கும் மேல் இமைக்கும் மையெழுதுகின்றனர். மையை எடுத்து கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும் வரை அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரியும்.ஆனால் மையெழுதும்போது அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதை நாம் எப்போதாவது கவனித்துள்ளோமா? வள்ளுவர் கவனித்திருக்கிறார்.
இதை இன்பத்துப்பாலில் ஒரு உவமையாகக் கையாள்கிறார் வள்ளுவர். அந்தக்குறள் இதோ....

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.

பொருள் தேடப் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலம் வரும் முன் பொருள் தேடி, தேரில் ஏறி வருவேன் என, “கார் வரும் முன் தேர் வரும்” என்று சொல்லிச் செல்கிறான்.
கார்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. பிரிவுத்துயரால் வருந்தும் தலைவியை, மழைக்கால குளிரும் சேர்ந்து மேலும் வருத்துகிறது. கார் வருமுன் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. என் துயரத்தை அவன் அறியவில்லை. வரட்டும் அவன்....சண்டை போடாமல் விடப்போவதில்லை.... என்று கோபத்தில் இருக்கிறாள் தலைவி.

தலைவன் வந்துவிடுகிறான். அவன் அருகில் வந்ததும், அதுவரை அவன் மீது இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை. தூரத்தில் இருக்கும்போது அவன் மீது தெரிந்த குறைகள் எல்லாமும் அவன் அருகில் வந்ததும் மறைந்து விடுகின்றன. எதைப் போல?

வள்ளுவர் சொல்கிறார்....

.:
தூரத்தில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியும் மைக்கோல், கண்ணில் மையெழுதும்போது தெரிவதில்லை. அதைப்போல, அவன் அருகில் வந்ததும் அவன் மீதான குறைகள் தெரிவதில்லை என்று சொல்கிறார்.
கண்ணுக்கு மையெழுதுவதைக்கூட எவ்வளவு நுட்பமாக கவனித்திருக்கிறார் பாருங்கள் வள்ளூவர்.
கண்ணுக்கு மையெழுத்போது ஏற்படும் அனுபவம் வள்ளூவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஆண்களும் கண்ணுக்கு மையெழுதும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. இது பற்றிய குறிப்பை பழைய இலக்கியங்களில் காண முடிகிறது.

தமிழ் ருசிக்கலாம் வாங்க..7


முத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”
=============================================
சில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....

தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.

எந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.

இப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்

Wednesday 8 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க... 6


கோபத்தை கொட்டும் சொற்கள்
=================================
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. ஆராயாமல், கோவலனைக் குற்றவாளி என்று முடிவு செய்து அவன் தலையை வெட்டச் செய்து மரண தண்டனை நிறைவேற்றிவிடுகிறான் பாண்டிய மன்னன். தகவல் அறிந்து, மன்னனிடம் நீதி கேட்க அரண்மனை வாயிலை அடைகிறாள் கண்ணகி. தனது வருகையை மன்னனிடம் போய்ச் சொல் என்று வாயிற்காவலனிடம் கூறுகிறாள். இதை இளங்கோவடிகள் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்....

வாயிலோயே ! வாயிலோயே !
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே.

வாயிற்காவலனே.... வாயிற்காவலனே...அறிவற்றுப் போன.... அறச் சிந்தனை கொஞ்சமும் இல்லாத.... அரசநீதி தவறிய பாண்டிய மன்னனின் வாயிற்காவலனே....இணையான சிலம்புகளுள் ஒன்றைக் கையில் ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் வந்து நிற்கிறாள் என்று உன் மன்னனுக்குப் போய்ச் சொல்...போய்ச் சொல்...என்கிறாள் கண்ணகி.

அநியாயமாக கணவன் கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில், நீதி கேட்க வருகிறாள் கண்ணகி, அவள் கோபம் கொப்பளிக்கப் பேசுவதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள் இளங்கோவடிகள்...

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே

என்று சொல்கிறார்.

இந்த இரண்டு வரிகளில் 6 முறை வல்லின ”ற” பயன்படுத்துகிறார். வல்லின எழுத்தை போடுவதன் மூலமே கண்ணகியின் கோபத்தைக் காட்டுகிறார்.
இந்த இரண்டு வரிகளைப் படிக்கும்போது கோபத்தில் நறநற என்று பல்லைக் கடிப்பது போல இருக்கும். நீங்களும் படித்துப் பாருங்கள். இருக்கிறதா? சோகத்தையும் கோபத்தையும் கூட ரசிக்கும்படி சொல்வதுதான் மொழியின் சிறப்பு.

உலக முத்த தினம்




உலக முத்த தினமாம்.
மொத்தமாக தரவா என்றேன்.
திருப்பித்தர கஷ்டம்.
தவணையில் கொடு
என்கிறாள் கள்ள்ளி.

***************************************

போதும் என்றாள்
தவித்தேன்....
திருப்பித் தருகிறாளாம்.

*****************************************

எண்ணினேன் என்றாள்
எத்தனை என்றேன்.
“உன்னையே எண்ணினேன்
என்னை மறந்து” என்கிறாள்

*****************************************

சிந்தை முழுதும் நீ
என்றாள்
சிந்தாமல் கொடுத்தேன்.
அவளும்தான்

******************************************

இனிக்குமென்று தெரியும்
இவ்வளவு இனிப்பாகவா?
கணிக்கவே இல்லை நான்

******************************************



காகிதத்தில்
கவியெழுத
பேனா வேண்டும்.

இதழில் எழுத
இதழே போதும்.


வா....
கவிதை இல்லை....
காவியம் எழுதுவோம்.

*******************************************

முகத்தில் என்பதால்
முத்தம்
முடிந்தாலும்
முடிவுரையல்ல...
முகவுரையே!!

தமிழ் ருசிக்கலாம் வாங்க. 5



சந்தத்தில் சதிராடும் தமிழ்.
=========================
பரணி இலக்கியம் என்பது போரில் வெற்றி பெற்றவனை வாழ்த்திப் பாடுவது. அதுவும் சாதாரண வெற்றி பெற்ற வீரனுக்குப் பாடுவது அல்ல. ஆயிரம் யானைகளைப் போரிலே வெட்டி வீழ்த்தி, மாட்சிமை வீரனுக்குப் பாடப்படுவதுதான் பரணி.

ஆனைஆயிரம் அமரிடை வென்ற
மாணவனுக்கு வகுப்பது பரணி

என்று சொல்லப்படுகிறது.

பரணி இலக்கியங்களுள் சிறப்பானது எனப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் எழுதியது. இதில் சந்தத்தில் தமிழ் சதிராடும். மொத்தம் 150 சந்தங்களில் எழுதியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமான சந்தங்கள் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. பாட்லைப் படிக்கும் போதே, பொருள் புரியாவிட்டாலும் எதைப் பற்றி சொல்கிறது அந்தப் பாடல் என்பதை அதன் சந்தத்தை வைத்தே புரிந்துகொள்ள முடியும். படிக்கும்போதே பாடல் சொல்வது காட்சிகளாக கண்களில் விரியும். காதுகளில் ஒலிக்கும்.
கலிங்கத்து பரணியில் வரும், போர்க்கள ஒலியைச் சொல்லும் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

எடும் எடும் எடும் என எடுத்ததோர்
இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக் குழாம்
விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே

போர்க்களத்து எழும் போரின் பேரொலியைச் சொல்லும் பாடல் இது.
போக்களத்தில் சோழப் படையினரும் கலிங்கர் படையினரும் குதிரைப்படை, யானைப் படையை போருக்கு ஏவுகின்றனர். எப்படி?

விரையட்டும் குதிரைப் படை,,,,, புறப்படட்டும் யானைப்படை.....என்று உரக்கக் கூவுகின்றனர். அந்த ஒலி, கடலோசையையும் வென்றது. எதிரிகள் மீது குதிரப்படையை ஏவுங்கள் ஏவுங்கள்.. யானைப்படையை எதிரிகளை நோக்கி விடுங்கள் விடுங்கள்...என்ற ஓசை மிகுந்து ஒலித்தது.....

இப்படி இந்தப்பாடலில் போரின் பேரொலியை சொல்கிறார் செயங்கொண்டார். இந்தப்பாடலில் பெரிதாக கற்பனை நயம் எதுவும் இல்லை. ஆனால் பாடலை வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். வேகமாகத்தான் படிக்க முடியும் இந்தப்பாடலை. போரின் வேகத்தையும் போர்க்கள ஒலியையும் பாடலின் சந்தமே சொல்லும். பாடலை கிடுகிடுவென படித்துப் பாருங்களேன்.

Monday 6 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 4



முத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”
=============================================
சில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....

தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.


எந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.

இப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்.

மறைக்கப்பட்ட வரலாறு



அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டில் கலந்துகொள்ள, புதுக்கோட்டை மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு அழைப்பு வந்தது.இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்வதைவிடவும் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டால், இந்து மதத்தின் சிறப்பைப்பற்றி நன்றாக விளக்குவார் என்று கருதினார் மன்னர்.

கன்னியாகுமரியில் இருந்த விவேகானந்தரை சந்தித்து, சிக்காகோவில் நடக்கும் மாநாட்டுக்குப் போய் வாருங்கள் என்றார் மன்னர் பாஸ்கர சேதுபதி. சிக்காகோ போய் வரும் அளவுக்கு தன்னிடம் பண வசதி இல்லை என்றார் விவேகானந்தர். மொத்த செலவையும் நானே ஏற்கிறேன் போய் வாருங்கள் என்று சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர்.

அந்த மாநாட்டில் பேசிய மற்ற மதத்தினர், நாட்டினர் எல்லாரும், “ ladies and gentlemen" என்று பேச்சைத் தொடங்கினர். விவேகானந்தரோ, “Brothers and sisters" என்று ஆரம்பித்தார். இதற்கே கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடம் ஆனது.

வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்புகிறார் விவேகானந்தர். அப்போது, “இந்த அரிய வாய்ப்பை வழங்கியவர் மன்னர் சேதுபதி. எனவே இந்தியா திரும்பும்போது முதல் அடியை அவருடைய மண்ணில்தான் வைப்பேன்” என்றார்.
அதன்படி, இலங்கை வந்து, அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் மண்டபம் வந்து இறங்கினார். மன்னர் சேதுபதி ஆளுகைக்கு உட்பட்டது இராமேஸ்வரம்.

விவேகானந்தரை வரவேற்கச் சென்ற மன்னர் சேதுபதி, “உங்கள் முதல் அடியை என் தலையில் வைத்து இறங்க வேண்டும் என்று சொல்லிப் பணிந்தார். அவர் வேண்டுகோளை ஏற்றார் விவேகானந்தர். கடற்கரையில் இருந்து, விவேகானந்தரை ஒரு ரதத்தில் அமர வைத்து மன்னரும் சேர்ந்து இழுத்துச் சென்றார்.மண்டபத்தில் விவேகானந்தர் வந்து இறங்கியதை நினவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கல்வெட்டு இன்னமும் அங்கு உள்ளது.
விவேகானந்தருக்கு பெரும் பெருமை சேர்த்தது, சிக்காகோ மாநாட்டில் அவர் பேசிய பேச்சுதுதான். இதற்கு காரணமாக இருந்த ஒரு தமிழ் மன்னனின் இந்த மாபெரும் செயல் விவேகானந்தருடையருடைய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழகத்தில் தொடங்கி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காவிரிக்கரையில் தொடங்காமல் கங்கை கரையில் இருந்து தொடங்கி எழுதப்பட்டதால், விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் செய்த பல தியாகங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அதுபோலத்தான், மேலே சொன்னதும் மறைக்கப்பட்டுவிட்டது.
--------------------------------------------------------------------------------------------
இன்று விவேகானந்தர் நினைவு நாள் ( ஜூலை 4)

தமிழ் ருசிக்கலாம் வாங்க 3




”முத்தொள்ளாயிரம்” நூலில் இருந்து ஒரு பாடல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தொள்ளாயிரம் என்பது சேர சோழ பாண்டியர் ஒவ்வொருவர் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் எழுதப்பெற்ற ஒரு நூல். பல ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பெற்ற புறத்திரட்டு என்னும் தொகுப்பில் இந்நூல் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,700 பாடல்கள் எழுதப் பெற்றன எனினும் கிடைத்திருப்பது 109 பாட்ல்கள்தான். இவற்றில் கடவுள் வாழ்த்து 1, சேரன் பற்றியது 21, சோழன் 30, பாண்டியன் 57. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை.
அகம், புறம் ஆகிய இரண்டு பொருளிலும் பாடல்கள் உள்ளன. அற்புதமான கற்பனை வளம் கொண்டவை இந்தப் பாடல்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கிடைக்காமல் போனது நமக்குப் பேரிழப்பு. இந்தப் பாடல்களைப் படிக்கும்போது, இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே, கிடைக்காமல் போன பாடல்கள் இன்னும் எப்படியெல்லாம் இருக்குமோ என மனம் வருந்தும். அத்தகைய முத்தொள்ளாயிரம் நூலில் இருந்து ஒரு பாடல்:

அள்ளல் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப்- புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு.


வேல் படையை உடைய சேர மன்னனின் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அங்கே எந்த ஒரு சண்டை சச்சரவுக்கோ சத்தத்துக்கோ இடமில்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அந்த நாட்டில் சத்தம் ஒன்று உண்டு என்றால் அது ஒன்றே ஒன்றுதான். அது என்ன சத்தம் தெரியுமா?
காலை நேரம். பொய்கையில் அன்னப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் நீந்திக்கொண்டிருக்கின்றன. அப்போது சிவந்த ஆம்பல் மலர்கள் மலர்கின்றன. இதைக்கண்ட அன்னப் பறவைகள், தண்ணீரில் தீப்பிடித்துக்கொண்டதாக எண்ணி, தங்கள் குஞ்சுகளை அவசரம் அவசரமாக அழைத்து, தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்ளும்.
இப்படி, அன்னப்பறவைகள் தங்கள் குஞ்சுகளை அழைக்கின்ற சத்தமும், அவற்றை தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்வதால் ஏற்படும் சத்தமும் தவிர வேறு எந்தசத்தமும் சேரன் நாட்டில் இல்லை.

அமைதியான நாடு என்று சொல்ல, எப்படியெல்லாம் கற்பனை செய்து அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

Saturday 4 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 2

கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்
================================

வெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியின் மறைய
பொய்யோயெனும் இடையாளுடன் இளையானுடன் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.


விளக்கம்
==========
இராமன் வனவாசத்தில் இருந்தபோது,சீதையுடனும் லட்சுமணனுடனும் காட்டு வழியில் சென்றதை கம்பர் வர்ணிக்கிறார். எப்படி?

சூரிய ஒளி இராமனின் மேனியில் பட, சூரியனே மறைந்து போகிறான். அந்த அளவுக்கு கரிய மேனியை உடையவன் ராமன். அப்படிப்பட்டவன், தனது இளையவனான லட்சுமணனுடனும் மனைவி சீதையுடனும் போகிறான். சீதையோ மெல்லிடையாள். அந்த இடை எவ்வளவு மெல்லியது என்று சொல்ல வருகிறார் கம்பர்.

சிற்றிடை, மிகச்சிற்றிடை, மிகமிகச் சிற்றிடை என்று ஏதேதோ வார்த்தைகள் போட்டுப் பார்க்கிறார் ஒன்றிலும் சொல்ல முடியவில்லை. இறுதியாக சொல்கிறார் “பொய்யோ எனும் இடையாள்” என்று. இடை இருக்கிறதா? இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யோ? என்கிறார். அந்த அளவுக்கு இருப்பதே தெரியாத சிறிய இடை.
அண்ணா ஒரு இடத்தில், பெண்ணின் இடையை வர்ணிக்கும்போது, “அவள் இடையோ கடவுளைப் பொன்றது” என்பார். இருக்கிறதா....இல்லையா என சந்தேகம் என்பதையே இப்படிச் சொல்வார் அண்ணா. சரி, கம்பருக்கு வருவோம்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில், இராமனின் நிறத்தை மீண்டும் வர்ணிக்க முயல்கிறார் கம்பர். என சொல்கிறார்?

”மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ” என்கிறார். இவன் நிறம் இருட்டா? மரகதத்தின் கரும்பச்சையோ, கடலின் கருநீலமோ கார்முகிலின் கறுப்பு நிறமோ.....அடடா எதிலுமே அடக்க முடியவில்லையே, ஐயோ...... வடிவத்தில் இவன் அழியாத அழகுடைவன்என்று சொல்கிறார் கம்பர்.

மை , மரகதம் ,மறிகடல், மழை முகில் என்று எல்லாவற்றையும் சொல்லி, எதிலுமே இராமனின் அழகை அடக்க முடியவில்லை. இராமனின் அழகைச் சொல்ல வார்த்தை கிடைக்காமல் “ஐயோ” என்று கதறுகிறான் கம்பன். சொற்களுக்குள் இராமனை ஏன் அடக்க முடியவில்லை என்றால், சொற்பதம் கடந்த பரம்பொருள் அவன். அதனால் அவன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஐயோ என்று கதறுகிறார் கம்பர்.

இந்தப் பாடலில், இன்னொரு சிறப்பு உண்டு. பாடலைப் பொறுமையாகப் படியுங்கள். மெதுவாக, நடப்பது போல இருக்கும் இதன் சந்தம். பாடல் ஏன் மெதுவாகப் பொகிறது?
முதலில் இராமன் போகிறான். கடைசியாக லட்சுமணன் போகிறான். நடுவிலே சீதை போகிறாள். போகும் வழி காட்டு வழி. மென்பஞ்சு பாதத்தாள் சீதையால் வேகமாக நடக்கமுடியாது. மெதுவாக நடக்கிறாள். அதனால், பாடலின் சந்தமும் மெதுவாகப் போகிறது

தமிழ் ருசிக்கலாம் வாங்க 1



முத்தொள்ளாயிரம் என்ற பழைய இலக்கியத்தில் ஒரு பாடல்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉம்
கூடல் இழந்தேன் கொடியன்னாய் - நீடெங்கின்
பாளையில் தேந்தொடுக்கும்பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்புடையுட் பெற்று.
-----------
பொருள்:
===========
தலைவி:
==========
காவிரி நீர் பாய்வதால் வளம் பெற்ற நாடு., தென்னம்பாளையில்கூட தேன் சிந்தும். அத்தகைய வளநாடாம் நம் சோழ நாட்டின் மன்னன் என் கனவிலே வந்தான் தோழி..... ஊடல் கொண்டேன் அவனோடு.....

தோழி:
=======
நனவிலே இல்லையென்றாலும் கனவிலே கண்டாயல்லவா? மகிழ்ச்சி தானே?

தலைவி:
========
அதுதான் சோகமடி தோழி........ ஊடல் நீட்டிக்கவும், கூடி மகிழும் முன்னே கலைந்ததே என் கனவு.